திங்கள், 1 அக்டோபர், 2012

கேள்வி-பதில்= மிருகங்களுக்குப் பாவமில்லை

வினா: சுவாமிஜி, ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்கள் ஒன்றை ஒன்று கொன்று தின்கிறது. அதற்கு பாவ, புண்ணியம் இல்லை என்கிறீர்கள், ஆனால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு மட்டும் பாவ - புண்ணியம் ஏன்?

மகரிஷியின் விடை: உலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. சீவன்களில் கருணைமிக்க எந்த உயிர்களுக்கும் நன்மையே செய்கின்ற ஓர் அற்புதமான சீவன் ஓரறிவான தாவரங்களே.

இறைவனின் பரங்கருனையே பஞ்சபூதக் கூட்டான வித்தாகி

, ஓரறிவுத் தாரவங்களாக உயிர்த்துள்ளது. அத்தாவரங்களே இரண்டறிவு முதல் ஆறறிவு வரையுள்ள சீவன்களுக்கு உணவாக வந்துள்ளது. தாவரங்கள் பிறவற்றிடம் இருந்து பறித்து உண்ணவேண்டிய அவசியமில்லை. பூமியில் இருந்து தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்கிறது.

இரண்டறிவில் இருந்து ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்களில் தாவர பட்சியான ஆடு, மாடு, மான், யானை போன்ற சில ஜீவன்களைத் தவிர மற்றவைகள் ஒன்றையொன்று கொன்று உணவாக்கிக் கொள்கிறது. அங்கு அதற்கு உணவு உற்பத்தி செய்யவோ, நாளைக்கு என்று சேமித்து வைக்கவோ தெரியாது. கிடைப்பதை அப்படியே உணவாக (Readymade Food) எடுத்துக் கொள்கிறது.

விலங்கினங்களிடையே பறித்து உண்ணல் என்பது அதன் இயற்கை சுபாவம். அவற்றிற்கு தனக்கு வேண்டிய உணவை தானே உற்பத்தி செய்து கொள்ள தெரியாது. அங்கு அதில் மனிதன் குற்றம் காண முடியாது. அதனால் ஐந்தறிவு வரை பாவ-புண்ணியம் என்பதில்லை.

உதாரணமாக கொசு நம்மைக் கடிக்கிறது. அதற்கு நாம் ஆறறிவு பெற்ற மனிதன் என்று தெரியாது. உணர்ந்து கொள்ளவும் முடியாது. "இரத்தமும், சதையும் நிறைந்த தன்பசிக்கான உணவு மலையே மனிதன்" என்று நினைத்துத் தனக்கு வேண்டியதைக் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்றே கடிக்கிறது.

ஐந்தறிவு விலங்கினங்களில் இருந்து வித்து எடுத்து வந்த மனிதன், தன் முழுமையை உணரும் ஆறாவது அறிவைப் பெற்ற பின்னும் பரிமாணத்தில் பெற்று வந்த விலங்கினப் பதிவாகிய 'பறித்து உண்ணல்' என்பதை விட முடியவில்லை. அங்கு தான் மூன்று விதமான குற்றங்களைச் செய்கிறான். அதுவே உலகின் அனைத்துக் குற்றங்களுக்கும் அடிப்படையாகிறது.

1 . உயிர்க்கொலை,
2 . உணவுக்காக அதன் உடலைத் திருடிக் கொள்ளுதல்,
3 . அதன் வாழும் உரிமையைப் பறித்தல்.

இந்த மூன்றிணைப்புக் குற்றமே இன்றும் மனித வாழ்வில் தொடர்கிறது.

ஒருவன் சிறிது பொருள் வைத்திருந்தால் மற்றவன் அதைப் பறிக்க நினைக்கின்றான். தன் சொல்லை மற்றவன் கேட்க வேண்டும் என்கிறான். இது வாழும் உரிமையைப் பறித்தலின் பரிமாண மாற்றமே. பொருள் பறிப்பது, அதிகார மோகம், புகழ் வேட்பு, பொறுக்க முடியாமை இவைகளால் மனிதர்களிடையே பஞ்சமகா பாவங்களும் ஏற்படுகிறது.

மனிதன் அறநெறியும் இறையுணர்வும் பெற்றாலே பாவம் போக்கி உயிர்களிடம் அன்பும் கருனையுமாக வாழ முடியும். இவ்விலங்கினப் பதிவுகளை மாற்றி மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறநெறியும், அறிவை உயர்த்தி வாழ்வின் நோக்கம் அறிந்து வாழ இறையுணர்வும் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக