வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கேள்வி-பதில்.

வினா: மகரிஷி அவர்களே, நான் தங்களைத் தவிர தங்கள் சிஷ்யர்களைக் கூர்ந்து நோக்குமிடத்து யாரும் அறுகுண சீரமைப்பிலோ, குணநலப் பேற்றிலோ வெற்றி பெற்றவர்களாகத் தெரியவில்லை. இப்பயிற்சிகள் நல்ல கொள்கையின் முடிவுகள் என்றே கருதுகிறேன். இதில் எனக்கு நம்பிக்கையில்லை. இப்பயிற்சியில் உயிர் தூய்மை அடைந்தவர்கள் யாராவது இருப்பின் நீங்கள் தயவு கூர்ந்து தெரிவித்தால் அவர்களின் பொற்பாதங்களை வணங்க விருப்பம் மிகக் கொண்டுள்ளேன்.

மகரிஷியின் விடை:

பரிணாமத்தில் விலங்கினக் கருத்தொடராக வந்து, இந்நாள் வரையும் வாழ்வில் புலன்வழி நின்று, மயக்க நிலையில் வாழ்நாளைக் கழித்த மனிதனுக்கு அறுகுண சீரமைப்பு என்பது ஒரே நாளில் அல்லது குறிப்பிட்ட காலத்தில் எல்லோருக்கும் கிட்டி விடாது. அவரவர்கள் பெற்ற தெளிவான விளக்கம், தளராத பயிற்சி, விடாமுயற்சி இவற்றிற்கு ஏற்ப பலன் சிறிது சிறிதாகத் தான் கிடைத்து வரும்.

தாங்கள் ஏதோ ஒரு சில அன்பர்களிடம் உரையாடி அவர்கள் உங்கள் கூற்றுக்கு வலுவான மறுப்புக் கூற, நீங்கள் சினமுற்று அந்நிலையில் எடுத்த முடிவே உங்கள் வினாவாகும். ஒருவர் எளிய முறைக் குண்டலினித்தவம், அகத்தாய்வுப் பயிற்சி இவற்றின் மூலம் அறுகுண சீரமைப்பில் வெற்றி பெறவில்லை என்றால் அது குண்டலினி யோகப் பயிற்சி முறையில் உள்ள குறைபாடு அல்ல. அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு ஆர்வத்தோடு முறையாகப் பயிற்சி செய்யாததால் ஏற்பட்ட குறைபாடாகும்.

மேலும் இது ஒரு 'கொள்கை முடிவுதான்' என்று கூறியிருக்கிறீர்கள். எந்தவொரு முறையும் அறிந்து கொள்ளும் அளவில் அது கொள்கை தான். ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்தால் அது கைவல்யம் ஆகும்.

உங்களுக்கு இந்த கொள்கையில் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்கள். அது உங்கள் மனோநிலை. உங்களை வற்புறுத்தி இதனை நம்பும்படி ஒருவர் அடுத்தடுத்துக் கூறினால் அவர் உணர்ச்சி வயப்பட்டவரேயாவார். அவர் சொல்லை நீங்கள் ஏற்று உங்கள் பொன்னான காலத்தை வீணாக்க வேண்டாம். இந்த அகத்தவ முறையில் வெற்றி பெற்றவர் யாராகிலும் இருந்தால், அவரைக் காட்டினால் அவர் பாதம் வணங்குவேன் என்று கூறுகிறீர்கள். இது ஒரு சவாலாகவே இருக்கின்றது.

மெய்ப்பொருள் எல்லாமாகவும், தானாகவும் விளங்கும் அகண்ட காட்சியை அகத்ததுவாய் உணர்ந்தவர்க்கு உங்கள் வணக்கம் ஏனோ ? அத்தகைய அன்பரை உங்களுக்குக் காட்டிக் கொடுத்து உதவும் திருப்பணி எனதல்ல. மெய்யுணர்ந்து உய்வு பெற்ற எண்ணிறந்த மெய்யன்பர்கள், என் உயிரோடு உயிராய், அறிவோடு அறிவாய் கலந்து உலகிற்கு நல்விளக்குகளாய்த் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எந்த அளவுகோல் கொண்டு நீங்கள் அளந்து கணிக்க முடியும் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக